புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனையை மதுக்கூடமாக மாற்றிய அவலம் சிவகங்கை மாவட்டம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு, மருத்துவமனையின் ஒரு அறைக்குள் மது பாட்டில்களும், தின்பண்டங்களும் சிதறிக்கிடக்க, ஊழியர்கள் யாரும் இல்லாமல் மருத்துவமனை வெறிச்சோடி இருக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய புனிதமான இடத்தில், அரசு ஊழியர்களே பொறுப்பின்றி இப்படி மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அவசரத் தேவைக்கு வரும் நோயாளிகளைக் கவனிக்கக் கூட ஆள் இல்லாமல், மது போதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்த இந்தச் செயல், மாவட்ட நிர்வாகத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.