மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிஹால் சிங் என்ற இளைஞர், அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது ரயில்வே உணவு விற்பனையாளர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணோ தேவியிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த நிஹால் சிங், ஐஆர்சிடிசி (IRCTC) நிர்ணயித்த 110 ரூபாய் சைவ உணவிற்கு 130 ரூபாய் கேட்ட விற்பனையாளர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜான்சி ரயில் நிலையத்தில் வைத்து பெல்ட் மற்றும் தடிகளால் அந்த இளைஞரை உணவு விற்பனையாளர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர் இது குறித்து ஜான்சி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தும், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கூடுதல் விலையைக் “சேவைக் கட்டணம்” என்று விற்பனையாளர்கள் நியாயப்படுத்துவது, ரயில்களில் நடக்கும் “உணவு மாஃபியா” அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.