பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவருடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், தனது 16 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி 21 வயது பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவீர் செகல், மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971-ன் படி, ஒரு பெண் தனது கருவைக் கலைக்க கணவனின் சம்மதம் பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
தன்னுடைய கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணுக்கே உண்டு என்றும், அவரே அதற்குச் சிறந்த நீதிபதி என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே சட்டப்படி போதுமானது என்று தெரிவித்த நீதிபதி, மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அந்தப் பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.