IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் எப்போது தொடங்குகிறது..? முழு அட்டவணை இங்கே!
TV9 Tamil News January 03, 2026 04:48 AM

இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி முதல் தொடங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) முன்னதாக இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவது, இந்த போட்டியை இன்னும் சிறப்புக்குரியதாக மாற்றியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் எப்போது தொடங்கும்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜனவரி 11 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி வதோதராவில் நடைபெறும். இரண்டாவது போட்டி 2026 ஜனவரி 14ம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 2026 ஜனவரி 18 ம் தேதி இந்தூரிலும் நடைபெறும். மூன்று போட்டிகளும் பகல்-இரவு போட்டிகளாக இருக்கும். அனைத்து போட்டிகளின் டாஸ் மதியம் 1:00 மணிக்கும் போடப்பட்டு, போட்டியானது மதியம் 1:30 மணிக்கும் தொடங்கும்.

ALSO READ: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

இந்திய அணி தேர்வு குறித்து சஸ்பென்ஸ்:

ஒருநாள் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. ஷ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி குறித்து அனுமதிக்காக தேர்வாளர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் அணி அறிவிப்பில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி இல்லாமல் இருந்தால், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படலாம்.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும் பேச்சு எழுந்துள்ளது. விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக செயல்படும் இஷான் கிஷான் மற்றும் சர்பராஸ் கான் மீது அனைவரின் பார்வையும் இருக்கும் அதே வேளையில், ரிஷப் பண்ட் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது.

ரோஹித்-விராட் மீது பெரிய எதிர்பார்ப்புகள்:

ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளனர். இரு வீரர்களின் அனுபவமும் ரன் குவிக்கும் திறனும் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சொத்தாக அமையலாம். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், இந்த நியூசிலாந்து தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் சாதனை:

ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா வலுவான சாதனையைப் பெற்றுள்ளது. இதுவரை விளையாடிய 120 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து 52 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. இந்த சாதனையை மேலும் வலுப்படுத்த இந்திய அணி முயற்சிக்கும்.

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முழு அட்டவணை:
  • 2026 ஜனவரி 11 – முதல் ஒருநாள் போட்டி, வதோதரா (BCS மைதானம்)
  • 2026 ஜனவரி 14 – 2வது ஒருநாள், ராஜ்கோட் (நிரஞ்சன் ஷா ஸ்டேடியம்)
  • 2026 ஜனவரி 18 – 3வது ஒருநாள் போட்டி, இந்தூர் (ஹோல்கர் மைதானம்)
நேரடி போட்டிகளை எங்கே பார்ப்பது..?

இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மொபைல் மற்றும் ஆன்லைன் பயனர்கள் ஜியோஹாட்ஸ்டாரில் போட்டியை நேரடியாகப் பார்க்கலாம்.

ALSO READ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: இந்தியா:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர்.

நியூசிலாந்து அணி:

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, பால்க்ஸ், மிட்ச் ஹே, ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ராய், வில் யங்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.