பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கி பெண்களின் உரிமையை வலியுறுத்தியுள்ளது: கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பம் மற்றும் சம்மதமே போதுமானது; கணவனின் அனுமதி அவசியமில்லை.
பஞ்சாபைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டதாவது, தனது கணவருடன் உறவு சரியில்லை, தற்போதைய நிலையில் பிரிந்து வாழ்கிறார் என்பதும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவீர் செகல், 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, உத்தரவு வழங்கினார். நீதிபதி தெரிவித்ததாவது,"கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் சட்டப்படி தேவையில்லை.
திருமணமான பெண்ணே தன்னுடைய கர்ப்பத்தை தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்பதில் மிகச்சிறந்த தீர்மானம் எடுக்க முடியும். அவளுடைய விருப்பம் மற்றும் சம்மதமே சட்ட ரீதியாக செல்லுபடியாகும்.
"மேலும், மருத்துவக் குழுவின் அறிக்கையின் படி, அந்த பெண் உடல் ரீதியாக கருக்கலைப்புக்கு தகுதியான நிலையில் உள்ளதால், கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, பெண்களின் உடலுரிமை மற்றும் தனித்துவ முடிவுகளை பாதுகாக்கும் முன்னோடியான அடிப்படை சட்டத் தீர்ப்பாக கருதப்படுகிறது.