ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவரை, பெண்ணின் உறவினர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சந்த் மற்றும் சாய் துர்கா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்குப் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உயிருக்குப் பயந்த காதல் ஜோடி, போலீஸ் பாதுகாப்பை நாடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தில் மணமகனின் பெற்றோர் பங்கேற்ற நிலையில், மணமகளின் வீட்டார் புறக்கணித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த சாய் துர்காவின் உறவினர்கள் சாய் சந்த்தை வழிமறித்துக் கடத்திச் சென்றனர். அவரைத் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர், அவரைச் சரமாரியாகத் தாக்கியதுடன், பலமுறை அறைந்தும் அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏலூரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) சிவ பிரதாப் கிஷோர் கூறுகையில், “மணமகள் சாய் துர்கா அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிறார். மணமகன் சாய் சந்த் தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். இந்த அந்தஸ்து வேறுபாடு காரணமாகவே பெண்ணின் வீட்டார் திருமணத்தை எதிர்த்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறை தொடராமல் இருக்கவும், உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாலும் புதுமணத் தம்பதியினருக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. “தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக யாரும் சட்டத்தை மீற அனுமதிக்கப்படமாட்டார்கள்” என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.