தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்துள்ள சம்பவம் உலக நாடுகளைத் திடுக்கிடச் செய்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு ஓவியர் கார்லோஸ் லட்டுஃப் வரைந்த அரசியல் கேலிச்சித்திரம் ஒன்று, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்த ஓவியத்தில் அமெரிக்காவின் அடுத்தடுத்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அப்சல்யூட் ரிசால்வ் எனப் பெயரிடப்பட்ட இந்த ரகசிய ராணுவ நடவடிக்கை மூலம் கராகஸ் நகரில் பதுங்கியிருந்த மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள அவர், நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவில் சுமூகமான அதிகார மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த ராணுவத் தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.