ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்!.. விஜய் மாஸ்!.. அடுத்தடுத்து குண்டு வீசும் பிரவீன் சக்ரவர்த்தி...
WEBDUNIA TAMIL January 07, 2026 07:48 PM


தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதேநேரம் காங்கிரசுக்கு இங்கே செல்வாக்கு இல்லை.. திமுகவுடன் கூட்டணி அமைப்பதால்தான் இங்கு அந்த கட்சியிக்கு சில எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கிறார்கள் என திமுகவினர் சொல்கிறார்கள். இந்நிலையில்தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகள் கேட்பது என்கிற முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் தரப்பு பரவலாக இதுபற்றி பேச துவங்கியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சமீபத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது கூட இது ற்றி பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்கிறார்கள்.

ஒருபக்கம் காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த போது தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினார். விஜய் கட்சி ஆரம்பித்த போது ‘எங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்’ என அறிவித்திருந்தார். எனவே காங்கிரஸின் கோரிக்கையை திமுக ஏற்கவில்லையென்றால் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.

இந்நிலையில்தான். தற்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி ‘கடந்த 60 ஆண்டு காலங்களாக காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை.. கட்சி பலவீனமாக போய்க்கொண்டிருப்பதை தடுக்கவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்கிறோம். இதுதான் காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கையாக இருக்கிறது.. எனவே அதை நோக்கி செயல்படுவோம்’ என தெரிவித்தார்.

மேலும் விஜயுடன் நடந்த சந்திப்பு பற்றி கேட்டதற்கு ‘நான் டெல்லியில் பலரையும் சந்திக்கிறேன்.. அப்போதெல்லாம் யாரும் கேட்கவில்லை.. விஜயை சந்தித்தால் மட்டும் ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள்.. அரசியலுக்காக மட்டும்தான் அவரை பார்க்க வேண்டுமா?.. நிறைய சொந்த விஷயங்கள் இருக்கிறது’ என பதில் சொன்னார். அதோடு ‘விஜய்க்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது.. அவர் சென்றால் கூட்டம் கூடுகிறது.. அவருக்கான பல ஆயிரம் பேர் வருகிறார்கள்.. அவர் அரசியல் சக்தியாக மாறிவிட்டார். அது எல்லோருக்கும் தெரியும்.. அதை மறுக்க முடியாது’ என்று
பேசியிருக்கிறார்.

காங்கிரஸில் முக்கிய பிரமுகரான பிரவீன் சக்கரவர்த்தி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டிருப்பதும், விஜயை பாராட்டி பேசியிருப்பதும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதை சந்தேகமாக இருக்கிறது. கண்டிப்பாக காங்கிரஸின் கோரிக்கையை திமுக ஏற்காது.. எனவே அவர்கள் தவெக பக்கம் செல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.