ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் உச்சானா பகுதியில், 10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு தம்பதியினருக்கு 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர், ஆண் வாரிசு மீதான அதீத மோகத்தால் தொடர்ந்து 10 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஓஜாஸ் மருத்துவமனையில் 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கும் குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசவம் நடந்ததாகக் குறிப்பிட்ட மருத்துவர்கள், இருவருக்கும் ரத்த தானம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய தந்தை சஞ்சய் குமார், தனது 10 மகள்களின் பெயர்களைக் கூட முழுமையாக நினைவுகூர முடியாமல் தடுமாறியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “ஆண் வாரிசுக்காக ஒரு பெண்ணின் உடல் இயந்திரமாக மாற்றப்படுவதா?” என்றும், “10 பெண் குழந்தைகள் பிறந்த பிறகும் தந்தையால் அவர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல முடியாத நிலை பரிதாபகரமானது” என்றும் பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.
“>
இந்தியச் சமூகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும், பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதும் மனப்போக்கும் மாறவில்லை என்பதையே இது காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், போதிய வருமானம் இல்லாத நிலையில் 11 குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை இத்தம்பதியினரால் சரிவர மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. வாரிசு அரசியலை விட வாரிசு மோகம் ஆரோக்கியமற்ற சமூக மாற்றங்களுக்கு வித்திடுவதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.