மும்பை மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஹார்பர் வழித்தடத்தில் உள்ள காட்டன் கிரீன் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலின் கதவில் கயிறு கட்டி தொங்கியபடி அந்த இளைஞர் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், மஸ்ஜித் பந்தர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அவர், இனி இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், இத்தகைய சாகசங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் மற்ற பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரித்துள்ளனர். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேருல் பகுதியில் கார் கூரையின் மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பயணித்த நபர் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இதுபோன்ற விதிமீறல்களைக் கண்டால் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.