சமூக வலைதளங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மரத்தில் தொங்கும் ராஜநாகத்தை நாய்கள் கூட்டம் ஒன்று ஆக்ரோஷமாகத் தாக்கும் தத்ரூபமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு மரத்தின் கிளையில் படம் எடுத்தபடி நிற்கும் ராஜநாகத்தைக் கீழே இருக்கும் மூன்று நாய்கள் குரைத்து மிரட்டுவதும், பின்னர் ஒரு நாய் அதன் வாலைப் பிடித்து இழுத்தவுடன் மற்றொரு நாய் பாம்பின் வாயைப் பிடித்துத் தாக்குவதும் பார்ப்போரைக் கதிகலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. சுமார் 10 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, பார்ப்பதற்கு நிஜமான காட்சி போலவே இருப்பதால் பலரும் இது உண்மை என்று நம்பி அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், உண்மையில் இது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, இன்றைய நவீன தொழில்நுட்பம் உண்மையான காட்சிகளுக்கும் போலியான காட்சிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளதை மெய்ப்பிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.