பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும்! ஓபிஎஸ் சொல்லும் கணக்கு!
Seithipunal Tamil January 05, 2026 04:48 PM

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் ஏற்கனவே வெளியே வந்து விட்டோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை அழைத்தபோது, தமிழக அரசியல் சூழல் குறித்து மட்டும் தகவல் தெரிவித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு இயக்கத்திற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது முற்றிலும் பொய்யான தகவல்” என்று கூறினார்.

மேலும்,“எங்களைப் பொறுத்தவரை, அதிமுகவில் பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படியே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்சியை நடத்தினார்கள். ஆனால், அந்த சட்ட விதிகள் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன” என்று அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து பேசிய ஓபிஎஸ்,“அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே எம்ஜிஆர் வகுத்த சட்ட விதி. அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அந்த சட்ட விதிகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய விதிகளை காப்பாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

மேலும்,“எம்ஜிஆர் தமிழகத்திற்கு செய்த புகழை மறைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அது கடும் கண்டனத்திற்கு உரியது. தவறு செய்தவர்களுக்கு தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பதிலை கூறியபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.இந்த பேச்சு, அதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி கணக்குகள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.