நேபாளத்தில் மீண்டும் வகுப்புவாத மோதல் வெடித்துள்ள நிலையில் பதற்றம் அதிகரிப்பு; எல்லைக்கு சீல் வைத்துள்ள இந்தியா..!
Seithipunal Tamil January 07, 2026 08:48 AM

நேபாளத்தில் மீண்டும் வகுப்புவாத மோதல்ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, அந்நாட்டுடனான எல்லைக்கு இந்தியா (சீல்) மூடியுள்ளது. தனுஷா மாவட்டத்தில், கமலா நகராட்சியை சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி ஆகியோர் சமூக ஊடகம் வழியாக குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் அவதூறாக பேசியுள்ளமை இடம்பெற்றுள்ளது. குறித்த காணொளியால் நேபாளத்தில் பிரச்சினை வெடித்துள்ள நிலையில், அதை தொடர்ந்து அங்குள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த காணொளியின் விளைவாக தனுஷா மற்றும் பர்சா மாவட்டங்களில் வகுப்புவாத பதற்றங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட இருவரையும், பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே கமலா நகராட்சி சகுவா மாரன் என்ற பகுதியில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளமை பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதனால், பிர்குஞ்ச் நகரத்தில் நிலைமை மோசம் அடைந்ததையடுத்து, அங்குள்ள சாலைகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், டயர்களை எரித்தும், சாலைகளில் தடுப்புகளை வைத்தும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், அங்குள்ள உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாடபட்ட நிலையில், பதற்றம் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி நடவடிக்கையில் இறங்கினர்.

இருப்பினும், நிலைமை பதற்றமாக இருப்பதால் பிர்குஞ்ச் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிர்குஞ்ச் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைமை பதற்றமாக காணப்படுவதால் இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், நேபாளத்துடனான எல்லையை இந்தியா தற்காலிகமாக மூடி எல்லைக்கு சீல் வைத்துள்ளது. அத்துடன், அவசர நிலைகளை தவிர மற்ற அனைத்து போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், சஷாஸ்திர சீமாபால் எல்லையை முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-நேபாளத்தை இணைக்கும் மைத்ரி பாலம் சிறப்பு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மைத்ரி பாலம் தவிர, சஹாதேவா, மஹாதேவா, பன்டோகா, சிவான்தோலா மற்றும் முஷர்வா போன்ற எல்லை பகுதிகளிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலைமை மோசம் அடைந்து வருவதால் அங்குள்ள இந்திய தொழிலாளர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.