சபரிமலை விழா-பக்தர்கள் வருகை அதிகரிப்பு-சபரிமலை அன்னதானம் பிரபலம்.. Dhinasari Tamil %name%
சபரிமலையில் மகரஜோதி விழா-பக்தர்கள் வருகை இரு மடங்காக அதிகரித்து வருகிறது.இதனால் பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது
சபரிமலையில் நடந்துவரும் மகரஜோதி விழாவுக்கு பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது. படியில் பக்தர்கள் ஏறுவதை வேகப்படுத்தி நிலைமையை சீராக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
பிற கோயில்கள் போல சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சபரிமலையில் நடப்பு மகர விளக்கு கால சீசன் கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை தொடங்கியது. 31-ம் தேதி முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வரத் தொடங்கியது. பம்பையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பம்பை மணல் பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில் சியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆவதாக தெரிவித்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மூலிகை குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. இது ஆறுதலாக இருந்தாலும் குழந்தைகளுடன் நீண்ட நேர காத்திருப்பில் இருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இதற்கிடையில் 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி நிலைமையை சீராக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 4000 முதல் 4200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் வயது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும்போது இதில் தொய்வு ஏற்படுவதாக போலீசார் கூறுகின்றனர். பொதுவாக போலீசாரின் ஒருநாள் பணி மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 18 படிகளில் மட்டும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 18 படிகளின் இரு பக்கத்திலும் 15 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 15 நிமிடம் இவர்கள் பணி நேரமாகும் மொத்தம் 6 முறை இவர்கள் படிகளில் பணியில் ஈடுபடுவார்கள். படிகளில் பக்தர்கள் வேகமாக ஏறினால் மட்டுமே வரிசையின் நீளத்தையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் சபரிமலை அன்னதானத்தில் கேரளாவின் பாரம்பரிய உணவான சத்யா பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்களுக்கு சத்யா பரிமாறப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல காலம் துவங்கியது முதல் ஜனவரி 01ம் தேதி வரை 8,74,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இவர்களில் 3,01,309 பேருக்கு காலை உணவும், 3.40 லட்சம் பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு 23,000 பேருக்கு சத்யா வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கேரள சத்யாவில் பொன்னி சாதம், பருப்பு, பப்படம், அவியல், தோரன், சாம்பார், ரசம், பாயசம் போன்ற உணவுகளும் அடங்கும். ஒவ்வொரு நாளும3் பல்வேறு பாயச வகைகள் வழங்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களிடம் கேரளா சத்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை விழா-பக்தர்கள் வருகை அதிகரிப்பு-சபரிமலை அன்னதானம் பிரபலம்.. News First Appeared in Dhinasari Tamil