ஆப்பிரிக்காவின் சவன்னா காட்டுப் பகுதியில் பெரிய அளவிலான பலூன் போன்ற பந்துக்குள் அமர்ந்து சென்ற ஒருவரை சிங்கக் கூட்டம் சூழ்ந்து தாக்கும் பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. ஜார்ப் பால் எனப்படும் அந்தப் பாதுகாப்புப் பந்துக்குள் இருந்தபடி காட்டைச் சுற்றிப் பார்த்த நபரை திடீரெனச் சூழ்ந்த சிங்கங்கள், அந்தப் பந்தை உருட்டியும் நகங்களாலும் பற்களாலும் கடித்தும் ஆக்ரோஷமாகத் தாக்கின.
அதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து சிங்கங்களின் நகங்கள் பட்டும் கிழியாத வகையில் உறுதிமிக்கப் பொருளால் செய்யப்பட்டிருந்ததால், அதற்குள் இருந்த நபர் காயமின்றித் தப்பினார். சிங்கங்களிடம் இருந்து தப்பிக்க அவர் அந்தப் பந்தை உருட்டியபடி வாகனத்தை நோக்கிச் சென்ற காட்சிகள் காண்போரைத் திகிலடையச் செய்துள்ளன.
இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அல்ல என்றும், உண்மையில் நடந்த சம்பவம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய விபரீத முயற்சிகள் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என இணையவாசிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.