ஹனிமூனுன்னு ஜாலியா இருக்கேன்னு நினைச்சீங்களா..சமந்தாவின் மா இன்டி பங்காரம் பட டிரைலர் அப்டேட்!
Seithipunal Tamil January 08, 2026 07:48 PM

வரும் ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா, இல்லையா என்ற பதற்றத்தில் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், அதே நாளில் “நான் வரேன்” என்று நடிகை சமந்தா அதிரடி அப்டேட்டை வெளியிட்டுள்ளார். பேருந்துக்குள் தலைவிரி கோலமாக நின்று போஸ் கொடுக்கும் அவரது புதிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு அனுஷ்கா நடித்த காட்டி படத்தில் இடம்பெற்ற பேருந்து சண்டைக் காட்சி ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றது. அதே பாணியில், இந்த முறை சமந்தாவின் பஸ் ஃபைட் சீன் போஸ்டர் வெளியாகி, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு, தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக பேசப்பட்டு வரும் சமந்தா, தற்போது தனது அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். இந்தி வெப் சீரிஸ்களான தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல் மூலம் ஆக்‌ஷன் நடிகையாக கவனம் ஈர்த்த சமந்தாவுக்கு, பாலிவுட் பட வாய்ப்புகள் இன்னும் கைவரவில்லை. வெளிநாட்டு படத்தில் நடிப்பதாக வெளியான தகவல்களுக்கும் இதுவரை தெளிவான அப்டேட் இல்லை.

இந்த நிலையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் வெளியீட்டு அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 2024 ஏப்ரல் 28ஆம் தேதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு மா இன்டி பங்காரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதற்கு முன், சமந்தா தயாரிப்பில் வெளியான சுபம் என்ற பேய் படத்தில் அவர் கேமியோ வேடத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மா இன்டி பங்காரம் படத்தின் டிரைலர் ஜனவரி 9ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகும் என சமந்தா அறிவித்துள்ளார். இந்த படத்தை நந்து ரெட்டி இயக்கியுள்ளார். மேலும், படத்தின் உருவாக்கத்தில் ராஜ் நிடிமோருவும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்பது அந்த நாளில் தெரிந்துவிடும். ஆனால் அதே நாளில் சமந்தாவின் மா இன்டி பங்காரம் டிரைலர் வெளியாகுவது உறுதி என்பதால், ரசிகர்களுக்கு அந்த நாள் சினிமா ரீதியாக பரபரப்பான நாளாக அமையப்போகிறது. டிரைலர் வெளியானால், படம் அடுத்த மாதமே திரையரங்குகளை எட்டும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.