சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. அலுவலக நேரத்தில் மட்டும் கடைபிடிக்கப்படும்..
TV9 Tamil News January 09, 2026 04:48 PM

சென்னை: ஜனவரி 9, 2026 தேதியான இன்று முதல் சென்னை எழும்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், அலுவலக நேரங்களில் (அதிக போக்குவரத்து நேரங்களில்) மட்டும் இந்த போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், அலுவலக நேரங்களில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட வேண்டிய சூழல் உருவாகிறது. குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க:எலி மருந்து… துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர் – வைரலாகும் வீடியோ

சென்னை எழும்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்:

சென்னையில் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல், எழும்பூர் போக்குவரத்துக் காவல் நிலையத்திற்குட்பட்ட பாந்தியன் ரவுண்டானா பகுதி 5 முனைச் சந்திப்பும், இரண்டு ரவுண்டானாக்களும் கொண்ட பகுதியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலைச் சீர்படுத்த 09.01.2026 முதல் அதிக போக்குவரத்து நேரங்களில், காலை 08.30 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!

எந்தெந்த வழிகளில் செல்லலாம்:
  • ருக்மணி லட்சுமிபதி சாலை, பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படும்.
  • ருக்மணி லட்சுமிபதி சாலையில், எத்திராஜ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், ருக்மணி லட்சுமிபதி சாலை – மாண்டியத் சாலை சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலைக்கு சென்று, பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானாவை அடையலாம்.
  • மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்களுக்கு, ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதி வழங்கப்படாது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • © Copyright @2026 LIDEA. All Rights Reserved.