பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தர்யாமி காலனியைச் சேர்ந்த நகை வியாபாரி முக்தியார் சிங், தனது பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வந்த கார் ஒன்று, அவர் மீது பலமாக மோதியது. கீழே விழுந்த முக்தியார் சிங்கை, காரிலிருந்து இறங்கிய கும்பல் நீண்ட வாள்கள் மற்றும் கத்திகளால் சரமாரியாக வெட்டியது.
உயிருக்குப் பயந்து அவர் ஓடியபோதும், விடாமல் துரத்தி வெட்டிய அந்தக் கும்பல், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 425 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்தச் சம்பவம் நடந்தபோது, கொள்ளையர்களின் கையில் இருந்த வாள்களைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. படுகாயமடைந்த முக்தியார் சிங் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், கடந்த ஒரு மாதமாகவே இவருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததும், மாமூல் (Extortion) தர மறுத்ததால் இந்தத் தாக்குதல் நடந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தத் துணிகரக் கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், போலீஸார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.