வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வராக வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். நேற்று தேமுதிகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கிய மாநாடாக இது கருதப்படுகிறது. இதில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் தொண்டர்களிடையே உரையாற்றிய எல்.கே.சுதீஷ் கூறியதாவது: கடலூர் மாவட்டம் என்றாலே அது கேப்டனின் கோட்டை; ராசியான மாவட்டம். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இம்மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.
அன்று 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டப்பேரவைக்குச் சென்றார். அதேபோல, வருகின்ற தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளனர். இவ்வளவு பெரிய பலம் கொண்ட கட்சி, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இடங்களின் எண்ணிக்கைக்காகப் ‘பேரம்’ பேசுவதில் தவறில்லை. தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும்.
இந்த மாநாட்டில் மொத்தம் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, “2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்ததால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.