நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களில் ஒன்றாக பராசக்தி இருந்தது.
பராசக்தி கதை, ரஜினியின் அடுத்த படம், ஜன நாயகன், அமரன், சமூக ஊடகத்தின் தாக்கம், தேசிய விருது எனப் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பிபிசி தமிழிடம் பேசினார்.
''நீங்கள் இதுவரை நடித்த படங்களிலே பராசக்திக்குதான் கடைசி நேரம் வரை ரிலீஸ் டென்ஷன் போல. ஒரு வழியாக சான்றிதழ் கிடைத்துவிட்டதே'' என்று நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது ''உங்களுக்குத் தெரிய இது முதல் படம். என்னுடைய 4, 5 படங்கள் வெளியீட்டில் வேறு மாதிரியான பிரச்னைகளைச் சந்தித்தன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கும், திரைத்துறையில் உள்ள சிலருக்கும் அந்தப் பிரச்னைகள் தெரியும். இன்னும் சொல்லப்போனால் பொங்கலுக்கு வெளியான என் முந்தைய படங்களான ரஜினிமுருகன், அயலான், டாக்டர் ஆகியவை பிரச்னைகளுடன்தான் வெளியாயின.
பராசக்திக்கு சான்றிதழ் வராததால், பட ரிலீசுக்கு இரண்டு நாட்கள் வரை திக்திக் மனநிலையில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். எதையும் வெளிக்காட்டாமல் பேசினோம். எப்படியாவது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டுமென்று நினைத்தோம். இப்போது நிம்மதியாக இருக்கிறது. எனக்கு இது 25வது படம்'' என்று சிரித்தபடி பேட்டிக்குத் தயாரானார் சிவகார்த்திகேயன்.
Dawn Pictures
கேள்வி: கமர்ஷியல் ஹீரோவான நீங்கள் பராசக்தி கதையைத் தேர்வு செய்தது எப்படி?
பதில்: "அண்ணன்-தம்பி பாசம், காதல், வீரம், புரட்சி, வில்லன் கதாபாத்திரம், மொழிக்காக எத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று சுதா விரிவாகக் கூறினார். இந்தக் கதையை விடக்கூடாது என்று உடனே சம்மதித்தேன்."
கேள்வி: அப்போ, படத்தில் திமுக இருக்கிறதா? அரசியல் சாயம் பூசப்படுமே என்கிற தயக்கம் வரவில்லையா?
பதில்: "பராசக்தி, மாணவர்கள் போராட்டத்தை விவரிக்கும் படம். அவர்கள் எதற்குத் தொடங்கினார்கள், எப்படி நடத்தினார்கள் என்பதைச் சொல்கிறது. அதில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை, எதிர்ப்பும் இல்லை. கதையை முழுதாகப் படித்ததால் அதில் அரசியல் சாயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். தாய்மொழியைக் கொண்டாடும் கதை என்ற தெளிவான கருத்தைத்தான் படம் பேசுகிறது. மற்றவர்கள் குத்தக்கூடிய முத்திரை குறித்து யோசிக்கக் கூடாது."
கேள்வி: 1960 கதை என்பதால் உங்கள் ஈடுபாடு எப்படி இருந்தது? அறிஞர் அண்ணா கதாபாத்திரத்துடன் நடித்துள்ளீர்களா?
பதில்: "நான் இந்தக் கதைக்கு வருவதற்கு முன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இயக்குநர் சுதா கொங்கரா நிறைய ஆராய்ச்சி செய்து, நிறைய படித்து, கேட்டு, பக்கா ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்திருந்தார். நான் கேள்வி கேட்டுக் குழப்பவில்லை. அண்ணாவுடன் என் கேரக்டர் நடிக்கவில்லை."
Dawn Pictures
கேள்வி: பராசக்தி படத்தில் சான்றிதழ் வாரியம் 25 மாற்றங்களைச் செய்யுமாறு கூறியது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: "ஒட்டுமொத்தமாக ஒரு படத்தில் என்ன சொல்ல வருகிறோம். அது எந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைகிறது என்பது முக்கியம். 25 என்ற எண்ணிக்கை முக்கியமல்ல, அதெல்லாம் போக, இன்னும் நிறைய விஷயங்கள் பராசக்தியில் இருக்கின்றன. எந்த வரையறையுமின்றி கட் கொடுத்துவிட்டதாகக் கூற முடியாது. சில இடங்களில் மியூட் செய்யச் சொன்னார்கள், சில இடங்களில் மாற்றங்கள் செய்யச் சொன்னார்கள். ஆனால், நாங்கள் நினைத்தது படத்தில் இருக்கிறது."
கேள்வி: இலங்கை படப்பிடிப்பு அனுபவம் பற்றி...
பதில்: "அந்தக் காலநிலை வித்தியாசமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்யும். அதனால, பிளான் ஏ, பிளான் பி என நிறைய திட்டங்களை இயக்குநர் வைத்திருந்தார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு படப்பிடிப்பை மாற்றிக் கொள்வார். அதுதவிர, இலங்கையில் படப்பிடிப்பு நடந்ததை அவர்களே நிறைய வீடியோவாக எடுத்தார்கள், அதை பக்காவாக எடிட் செய்தும் வெளியிட்டார்கள். கொஞ்சம் விட்டால் படத்தையே ரிலீஸ் செய்துவிடுவார்கள் போல என்று கூறிச் சிரித்தோம். அவர்களின் அன்பு அப்படிப்பட்டது."
கேள்வி: பராசக்தி நடிகர் சூர்யாவுக்குச் சொன்ன புறநானுாறு கதைதானே?
பதில்: "ஆமாம், அதை முதலிலேயே சுதா கூறிவிட்டார். அது எனக்கு இன்னும் ஆச்சரியம். டிரஸ், வசனம் எல்லாமே அந்தக் காலம் மாதிரி இருக்கணும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு அது புரிய வேண்டும் என்று நினைத்து எடுத்துள்ளோம். படப்பிடிப்பு தளத்தில் 1960களில் வாழ்ந்தோம். படப்பிடிப்பு முடிந்து செல்போனை தொடும்போதுதான் 'அட, இது வேறு காலம்' என்ற நினைப்பு வரும்."
கேள்வி: தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் மற்றும் வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான இந்தக் கதை புரியுமா?
பதில்: "சில விஷயங்களை உன்னிப்பாகப் பார்த்தால் சில படங்களை எடுக்கவே முடியாது. எல்லா இடத்திலும் மண் சார்ந்த, மொழி சார்ந்த உணர்வு இருக்கும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் அவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று யாராவது யோசித்துப் பார்த்திருப்பார்களா?
படத்தில் பல புதிய விஷயங்கள் உள்ளன. என் மகளுக்கு இந்தப் போராட்டம் பற்றித் தெரியாது. அப்படிப்பட்டவர்களை ஈர்ப்பதற்கான விஷயங்களையும் படத்தில் வைத்துள்ளோம். அண்ணன் தம்பி எமோஷன் எல்லோருக்கும் பிடிக்கும். இது இந்திக்கு எதிரான திரைப்படமல்ல, இந்தி திணிப்புக்கு எதிரான படம். நாம் பார்க்கும் வேலைக்கு, போகிற ஊருக்கு தக்கப்படி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளோம். இது, வேறு வகை அரசியல் பேசுகிறது."
கேள்வி: ஜனநாயகன், பராசக்தி போட்டியை எப்படி பார்த்தீங்க?
பதில்: "முதலில் ஜனநாயகன் வருவதாக இருந்தது. அடுத்து பராசக்தி பார்ப்பார்கள் என்று நினைத்தோம். எனக்கு எப்போதும் போட்டி மனப்பான்மை கிடையாது. அப்படி இருந்தால் நான் ஓட்டப் பந்தயத்தைத் தேர்வு செய்திருப்பேன், சினிமாவை அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதை விரும்பமாட்டேன். அத்தகைய மனநிலை இருந்திருந்தால் பாக்சிங் பக்கம் போயிருப்பேன். நான் நடிகராக இருக்க ஆசைப்பட்டேன். அந்தக் காலத்தில் பண்டிகை நாட்களில் 7 படங்கள், பல ஹீரோக்களின் படங்கள் வந்துள்ளன.
கேள்வி: ஜனநாயகன் வெளியாகாதது பற்றி...?
பதில்: "உண்மையில் நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் பெரிய ஹீரோ. அவரது படங்கள் வருகிற நாட்கள் கண்டிப்பாக பண்டிகையாகத்தான் இருக்கும்."
Dawn Pictures
கேள்வி: விஜய் படம் தாண்டி, சான்றிதழ் கெடுபிடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: "ஜன நாயகன் படத்தைப் பொறுத்தவரை சான்றிதழ் விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சில விஷயங்களை பேச முடியாது, கருத்து சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். பராசக்தியில் பிரச்னை வந்தது. படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கமாக இருந்தது.
இனி சான்றிதழ் பெறுவதற்கான வேலைகளை 2 மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டுமென்று நினைக்கிறேன். அது தயாரிப்பாளர், இயக்குநர் கையில் இருக்கிறது. நான் அவரை அண்ணனாக பார்க்கிறேன். அவர் என்னை தம்பியாகப் பார்க்கிறார். சமூக ஊடகத்தில் பல விஷயங்கள் வரலாம். அனைவரையம் திருப்திபடுத்த முடியாது."
கேள்வி: பொதுவாக, ஒரு படம் முடிக்கும் முன்பே அடுத்த படத்தை அறிவித்துவிடுவீர்கள். இப்போது ஏன் தாமதம்?
பதில்: "என் அடுத்த படத்தை சிபிசக்ரவர்த்திதான் பண்ண வேண்டியது. ஒரு நாள் போன் செய்தார். நான் எடுக்கவில்லை. திடீரென வீட்டுக்கு வந்து 'முக்கியமான விஷயம் சார், ரஜினியுடன் படம் பண்ணுறேன்' என்று கூறினார். 'சூப்பராக பண்ணுங்க' என்று நானும் சந்தோஷப்பட்டேன்."
கேள்வி: அப்படியெனில், உங்களுக்குச் சொன்ன கதையைத்தான் ரஜினியை வைத்து எடுக்கிறாரா?
பதில்: "இல்லை, அது வேறு கதை. என் கதை அப்படியே இருக்கிறது. அதை அதற்கடுத்து பண்ணுவோம். ரஜினி சார் படக் கதையும் எனக்குத் தெரியும், ஆனா, சொல்லமாட்டேன்."
Dawn Pictures
கேள்வி: ரஜினி, கமல் மாதிரியான மூத்த நடிகர்கள், ஜென் Z தலைமுறையை மனதில் வைத்துப் படம் எடுக்கிறார்கள். நீங்கள் அமரன், பராசக்தி என்று பின்னோக்கிச் செல்கிறீர்களே?
பதில்: "பின்னாடி போய் முன்னேற நினைக்கிறேன். கதைகள் நம்மைக் கவர்கின்றன. ரஜினி, கமல் மாதிரி படம் பண்ண முடியாது. அவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கையே அவ்வளவு அதிகம். எனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும், நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்."
கேள்வி: ஹீரோக்களுக்கான போட்டியில் குறுகிய காலத்தில் 5 இடங்களுக்குள் வந்துவிட்டீர்கள். இப்போது, இன்னும் முன்னேறி விட்டதாகச் சொல்கிறார்களே?
பதில்: "நான் அப்படிப்பட்ட போட்டியை மனதில் வைத்துப் படம் பண்ணுவதில்லை. அப்படி நினைத்திருந்தால் டாக்டர், அமரன், பராசக்தி மாதிரியான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தவிர்த்துவிட்டுத் தொடர்ந்து பக்கா கமர்ஷியல் படங்களை மட்டுமே செய்திருப்பேன். வசூலை மட்டுமே குறி வைத்து படங்களைத் தேர்வு செய்வதில்லை. நல்ல கதைகள் சொல்ல நான் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன்."
கேள்வி: இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி அதிகமாகியுள்ளதே, அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
பதில்: "முகம் தெரியாதவர்கள் சொல்வதற்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். முகம் தெரிந்த நண்பர்கள், குடும்பத்தினர் சொல்வதற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். சமூக ஊடகத்தில் டிரம்ப் உள்பட நம்மை கவனிக்கிறார்கள், நம்மை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நல்ல விஷயம் மரம் மாதிரி, மெதுவாகப் பரவி, வளர்ந்து நல்லது செய்யும். கெட்ட விஷயங்கள் உடனே பரவும். அதைப் புரிந்து கொண்டால் சரி."
கேள்வி: 25 படங்களில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? சினிமாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?
பதில்: "கடந்த 15 ஆண்டுகளில் எனக்குத் தெரியும் என்று நினைத்தது எல்லாம் இப்போது மாறிவிட்டது. சினிமா மாறிவிட்டது. மாறுபட்ட படங்கள் பண்ண வேண்டும். தயாரிப்பாளர்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, நெகட்டிவிட்டியை தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்தினால் போதும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு