நடிகர் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம், நிகழ்கால அரசியல் போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், கடந்த டிசம்பர் 15-ல் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. படத்தை ஆய்வு செய்த குழு, 25-க்கும் மேற்பட்ட திருத்தங்களைப் பரிந்துரைத்து, ‘ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது.
தணிக்கைக் குழுவின் இந்த முடிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதை மக்கள் எளிதில் உணர முடிகிறது. கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகப் பண்புகளும் மதிக்கப்பட வேண்டும். எனவே, தணிக்கைக் குழு பிடிவாதத்தைக் கைவிட்டு, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் கீழ் செயல்படும் தணிக்கை வாரியம் (Censor Board), திரைத்துறையை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதை அழிப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் செயல்படக்கூடாது. ஜனநாயகன் திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தணிக்கை வாரியம் மேல்முறையீட்டுக்குச் செல்வது உள்நோக்கம் கொண்டது.
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை. திரைத்துறைக்கு எதிராகச் செயல்படுவதைத் தணிக்கை வாரியம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.