திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவிக்குமார் (48), நகரில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்த கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும், சமாதானபுரம் வாட்டர் டேங்க் அருகே சென்ற திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் அவர் வழிமறித்து, அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பணம் தர மறுத்ததால், இருவரையும் அவதூறு வார்த்தைகளால் திட்டி, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்க முயன்றதாகவும் புகார் தெரிவிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ரவிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர்.