இந்திய ரயில்களில் ஏன் வைஃபை வசதி இல்லை என்பது குறித்து ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்வி, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
@Mysterious_Muffin380 என்ற பயனர், ரயிலில் பயணம் செய்யும் போது இணைய வேகம் குறைவாக இருப்பதால் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அனுபவம் வாய்ந்த பயணிகள், கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸில் வைஃபை வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் மிக அதிக செலவு பிடித்ததாகவும், பயணிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேகத்தை வழங்கத் தவறியதாலும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
சுமார் 1.26 லட்சம் கி.மீ நீளமுள்ள பரந்த ரயில்வே கட்டமைப்பில், அதிவேகமாகச் செல்லும் ரயில்களுக்குத் தடையற்ற செயற்கைக்கோள் இணையத்தை வழங்குவது பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் சவாலாக இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்திய ரயில்வே நாடு முழுவதும் சுமார் 6,100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ‘ரயில்வயர்’ (RailWire) மூலம் இலவச வைஃபை வசதியை வழங்கி வருகிறது. ஆனால், நகரும் ரயில்களுக்குள் இணைய வசதி வழங்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளன.
வந்தே பாரத் போன்ற நவீன ரயில்களில் வைஃபை வசதி இருந்தாலும், அது பெரும்பாலும் திரைப்படங்கள் மற்றும் இசை போன்றவற்றை ரசிக்க உதவும் ‘இன்ஃபோடெயின்மென்ட்’ (Infotainment) எனப்படும் உள்ளகத் தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது நேரடி இணையச் செயல்பாடுகளுக்கு (Live Internet) முழுமையாக உதவுவதில்லை.
எதிர்காலத்தில் ஸ்டார்லிங்க் போன்ற மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் மலிவான விலையில் கிடைக்கும்போது, இந்திய ரயில்களில் தடையற்ற இணையச் சேவை சாத்தியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை பயணிகள் மொபைல் நெட்வொர்க் மற்றும் நிலையங்களில் உள்ள வைஃபை வசதிகளையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.