தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஆழ்வார்குறிச்சியில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், முருகேசன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
இன்று அதிகாலை முருகேசன் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ₹40 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹30 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அதே பகுதியில் உள்ள மேலும் இரண்டு வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி போலீஸார், கைரேகை நிபுணர்களுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரே கோவிலுக்குச் சென்ற நேரத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.