Hanif Khokhar/Getty
குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த டிராக்கரின் கையில் தவறுதலாகப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
இது எப்படி நடந்தது மற்றும் ஒரு சிங்கத்தை மயக்கமடையச் செய்ய எவ்வளவு மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது? இது மனிதர்கள் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது?
இந்த முழுச் சம்பவமும் நடந்தது எப்படி?பிபிசி குஜராத்தியின் ஹனிப் கோகர் ஜூனாகத்திலிருந்து வழங்கிய தகவலின்படி, விஸாவதரின் நாணி மோன்பாரி என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் சிங்கத்தினால் மக்களிடையே அச்சம் பரவியது
பண்ணைப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளியான சைலேஷ்பாய் பர்கியின் சிவம் என்கிற நான்கு வயது மகனை, ஒரு பெண் சிங்கம் தாக்கியது. அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் சிங்கத்தை மீட்பதற்காக சாசனிலிருந்து ஒரு சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது.
மீட்புக் குழுவில் விஸாவதர் வனச்சரக அதிகாரிகள், ஆர்.எஃப்.ஓ, மருத்துவர்களின் குழு மற்றும் டிராக்கர்கள் இடம்பெற்றிருந்தனர்.
Hanif Khokhar ராம்ரத்தன் நாலா
ஜூனாகத் வனப் பாதுகாவலர் முனைவர் ராம்ரத்தன் நாலா, "மீட்புப் பணியின் போது, பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியிலிருந்து மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், டிராக்கர் அஷ்ரப் பாய் சௌஹான் பெண் சிங்கத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார், துரதிர்ஷ்டவசமாக அந்த ஊசி சிங்கத்தின் மீது படுவதற்குப் பதிலாக டிராக்கரின் இடது கையில் குத்தியது," என்றார்.
"அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஷ்ரப் பாய் சௌஹான் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்," என்றார்.
சிங்கத்தை மீட்கும் முயற்சியின் போது டிராக்கர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், குஜராத் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது?முனைவர் ராம்ரத்தன் நாலா கூறுகையில், "பெண் சிங்கத்தின் எடையானது ஒரு மனிதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். ஒரு மனிதனின் சராசரி எடை 70 கிலோ, ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் எடை 210 முதல் 250 கிலோ வரை இருக்கும். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்கான மருந்தின் அளவு அதன் எடையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு மனிதருக்கு இந்த அளவு மருந்து செலுத்தப்பட்டால், அது அவரைத் தீவிரமாகப் பாதிக்கும்," என்றார்.
பெண் சிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
"அந்த ஊழியர் வனத்துறையின் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தார், அவருக்கு காப்பீடு உள்ளது. அந்தப் பணம் அவரின் குடும்பத்துக்கு சென்றடையும் மற்றும் வனத்துறையினால் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்றார் முனைவர் ராம்ரத்தன் நாலா.
இந்த நடவடிக்கையின்போது அந்தப் பெண் சிங்கம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு