ராஜஸ்தானின் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவில், சிறுத்தைப்புலி குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ரணதம்போர் கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், ‘ரித்தி’ என்ற பெண் புலியின் குட்டியாகக் கருதப்படும் இந்த சிறுத்தைப்புலி, மதில் சுவரை ஒட்டி மிகவும் நிதானமாக நடந்து செல்வதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
மேலும் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டும் சற்றும் அஞ்சாமல் உலா வந்த அந்தக் குட்டியைக் கண்ட வாகன ஓட்டிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களது வாகனங்களை மெதுவாகப் பின்னோக்கி நகர்த்தி பாதுகாப்பான தூரத்தை உறுதி செய்தனர்.
View this post on Instagram
A post shared by Ranthambhore National Park (@ranthambhorepark)
“>
இந்த அரிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க ரணதம்போர் கோட்டைப் பகுதியில் வனவிலங்குகளும் பழங்காலச் சின்னங்களும் பின்னிப் பிணைந்திருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
அதே சமயம், சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல், போதிய இடைவெளியைப் பராமரித்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த வனப்பகுதியில் அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலங்களில் இத்தகைய காட்சிகள் அடிக்கடி அரங்கேறுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.