ஓபிஎஸ், சசிகலா இருவருக்கும் அதிமுகவிலும் இடமில்லை... கூட்டணியிலும் இடமில்லை... இபிஎஸ் திட்டவட்டம்
Top Tamil News January 09, 2026 04:48 PM

அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், உடனடியாக டில்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக கவர்னரிடம் அளித்த திமுக அமைச்சர்கள் மீதான துறைவாரியான ஊழல் புகார் பட்டியலை ஆதாரங்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து அவர் கொடுப்பதற்காக டில்லி சென்றதாக தகவல்கள் வெளியாகின. நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசி விட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை புறப்பட்ட அவர், டில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா புதுக்கோட்டைக்கு வந்த போது அவரை சந்திக்க முடியவில்லை. கள்ளக்குறிச்சி மற்றும் சேலத்தில் பிரசாரம் இருந்ததன் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் தான் இப்போது டில்லியில் வந்து அவரை சந்தித்தேன். திமுக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பும் உள்ளது. திமுக ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்கரித்ததன் காரணமாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என்பது ஏமாற்று வேலை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்களின் கனவுகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, சசிகலாவிற்கோ மீண்டும் அதிமுக.,வில் இடமில்லை. அவர்களுக்கு கூட்டணியிலும் இடமில்லை. தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி எங்கள் தலைமையிலான கூட்டணி தான். எங்கள் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார். டிடிவி.தினகரனின் அமமுக என்டிஏ கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலளித்த அவர், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றி வெளிப்படையாக பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, ஒப்பந்தம் முடிவான பிறகு அது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.

அதிமுக.,வின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது. அதிமுக.,வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட போவதில்லை என அமித்ஷா ஏற்கனவே செய்தியாளர்களிடம் வெளிப்படையாக கூறி விட்டார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.