தமிழக அரசு மற்றும் மெட்டா (Meta) நிறுவனம் இணைந்து வாட்ஸ்அப் மூலம் 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான ஆவணங்களை அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் 7845252525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் புரட்சி குறித்து மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த சாட்பாட் (Chatbot) சேவை மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மக்கள் விண்ணப்பிக்கவும், ஆவணங்களைப் பதிவேற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளது; விண்ணப்பித்த சில நாட்களிலேயே சான்றிதழ்கள் நேரடியாக வாட்ஸ்அப்பிற்கே பிடிஎப் (PDF) வடிவில் வந்து சேரும்,” எனத் தெரிவித்தார்.