இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயர், விமான நிலையத்தில் நாய் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவருக்கு அவர் ஆட்டோகிராப் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் தனது செல்லப் பிராணியுடன் (இந்திய ஸ்பிட்ஸ் இனம் நாய்) நின்றிருந்த பெண் ரசிகையிடம் ஸ்ரேயாஸ் பேசினார்.
அந்த நாயுடன் நட்பு பாராட்ட எண்ணிய ஸ்ரேயாஸ், அதனைத் தொட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் ஆக்ரோஷமடைந்து ஸ்ரேயாஸின் கையைக் கடிக்கப் பாய்ந்தது. எனினும், சாதுரியமாகச் செயல்பட்ட அவர், உடனடியாகத் தனது கையை பின்னுக்கு இழுத்ததால் காயமின்றி தப்பினார். பின்னர் பாதுகாப்புப் படையினருடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போதுதான் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். ஒருவேளை நாய் கடித்தால், மீண்டும் காயம் ஏற்பட்டு அவர் விளையாடுவது தடைபட்டிருக்கும். தற்போது அவர் நலமுடன் இருப்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நாளை (ஜனவரி 11) வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் தொடங்குகிறது.
டி20 தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா நீக்கப்பட்டுள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அவரது உடற்தகுதி சோதனைகளுக்குப் பிறகே அவர் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.