2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி காரணமாகப் பனிப்போர் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணி ராமதாஸ் அதிமுக – பாஜக கூட்டணியை ஆதரிக்கும் நிலையில், டாக்டர் ராமதாஸ் திமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தந்தை ஒரு அணியாகவும், மகன் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருவது பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, “சாதியவாத பாமகவுடனும் மதவாத பாஜகவுடனும் தங்களுக்கு ஒட்டுமில்லை, உறவுமில்லை” என்று திருமாவளவன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பாமக பிரிந்து கிடப்பது வெறும் யூகங்களே என்றும், தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவைத் தங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனே அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.