சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் திமுகவுக்கு ஆதரவான பரப்புரையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது திமுக – காங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள “தமிழுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இனி ஆட்சிக்கே வர முடியாது” என்ற வசனம் காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இந்தப் படம் தோல்வியடைந்துவிட்டதாகவும், மக்கள் பணத்தை வீணாக்க வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். அதேபோல், திருச்சி வேலுச்சாமி போன்ற மூத்த தலைவர்கள், “ஊர் மக்களுக்கு ஒரு நீதி, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு நீதி” எனத் திமுகவினரின் இந்தி எதிர்ப்பைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர். இந்த அரசியல் மோதலால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.