கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாகக் காட்டுக் காளான்களைச் சாப்பிட்டு விஷ பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ‘அமனிடா ஃபல்லாய்டிஸ்’ (Amanita phalloides) என்று அழைக்கப்படும் இந்த ‘டெத் கேப்’ காளான்களைச் சாப்பிட்ட 35-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், பலருக்குக் கல்லீரல் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் காளான்கள் பார்ப்பதற்கு நாம் சாதாரணமாகச் சாப்பிடும் பட்டன் காளான்களைப் போலவே இருப்பதால், மக்கள் தெரியாமல் பறித்துச் சமைத்துவிடுகின்றனர்.
இதில் உள்ள ‘அமடாக்சின்’ (Amatoxin) என்ற கொடிய விஷம், மனித உடலில் நுழைந்த 24 மணி நேரம் வரை எந்த அறிகுறியையும் காட்டாது. அதன் பிறகுதான் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
ஆனால் அதற்குள் அந்த விஷம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை முழுமையாகச் சிதைத்துவிடும். “கடைகளில் விற்கப்படும் காளான்களைத் தவிர, காடுகளில் தானாக முளைக்கும் எந்தக் காளானையும் தொடாதீர்கள்” எனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.