பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வும், கேரள இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் மாங்கூட்டதில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாகக் கேரள காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்களில் சிக்கி, நீதிமன்றத்தின் மூலம் கைதுக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்த ராகுல் மீது, பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது மூன்றாவது பாலியல் புகாரை அளித்துள்ளார்.
மேலும் திருமண ஆசை காட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாயக் கருக்கலைப்பில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புதிய புகாரின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு பாலக்காட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ராகுலைத் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் ராகுல் மாங்கூட்டதில் மீது பாலியல் பலாத்காரம், கட்டாயக் கருக்கலைப்பு, மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்டோர் இவர் மீது பாலியல் சீண்டல் புகார்களை முன்வைத்திருந்த நிலையில், தொடர் சர்ச்சைகளால் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது கைது செய்யப்பட்ட ராகுல், பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.