எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘க்ரோக்’ செயற்கை நுண்ணறிவு சாட்போட்டிற்கு இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்தச் செயலியின் மூலம் ஆபாசமான மற்றும் தவறான ‘டீப்ஃபேக்’ புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க க்ரோக் ஏஐ பயன்படுத்தப்படுவதாக உலகளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்தோனேசியா இந்தத் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது.
இந்தத் தடை குறித்துப் பேசிய இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத், இத்தகைய ஏஐ செயல்பாடுகள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் க்ரோக் ஏஐ செயலியை முழுமையாகத் தடை செய்த உலகின் முதல் நாடு என்ற பெயரை இந்தோனேசியா பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.