இயற்கை அன்னை உருவாக்கிய உயிரினங்களில் சில, அறிவியலையே சவால் செய்யும் அளவுக்கு வியக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்டவை. உயிர் தப்பிக்க மட்டுமல்ல, இயற்கையின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான திறன்களுடன் வாழ்கிறது.
அந்த வரிசையில், விஞ்ஞான உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு அபூர்வ உயிரினம் தான் ஆக்சோலோட்ல் (Axolotl).மெக்சிகோவில் மட்டுமே இயற்கையாகக் காணப்படும் இந்த நீர்வாழ் உயிரினம், ஒரு வகை சாலமாண்டர். “ஆக்சோலோட்ல்” என்ற சொல்லுக்கே “என்றென்றும் இளமை” என்ற அர்த்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெயருக்கேற்ப, இது தனது வாழ்நாள் முழுவதும் இளமைப் பருவத் தோற்றத்துடன், தண்ணீரிலேயே வாழ்கிறது. நிலத்திற்கு வந்து உருமாறும் இயல்பே இதற்கு இல்லை — இதையே விஞ்ஞானத்தில் நியோடெனீ (Neoteny) என்று அழைக்கின்றனர்.இந்த உயிரினத்தின் மிகப்பெரிய அதிசயம் அதன் மீளுருவாக்க ஆற்றல்.
கை, கால், வால் போன்ற உடல் உறுப்புகள் மட்டுமல்ல; இதயம், முதுகெலும்பு, மூளையின் சில பகுதிகள் சேதமடைந்தாலும் கூட, அவற்றை முழுமையாக மீண்டும் வளர்த்துக்கொள்ளும் அசாதாரண திறன் ஆக்சோலோட்லுக்கு உண்டு. அதுவும் எந்த தழும்பும் இல்லாமல்!புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில் ஆக்சோலோட்ல் விஞ்ஞானிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில், இவைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 1000 மடங்கு குறைவு. செல்கள் சேதமடைந்தால், அவை கட்டியாக மாறாமல், புதிய உறுப்புகளாகவே மாறும் தன்மை கொண்டவை.மேலும் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், ஒரு ஆக்சோலோட்லின் உடல் உறுப்பை மற்றொன்றில் பொருத்தினாலும், அது எந்த எதிர்ப்புமின்றி உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உடல் நிராகரிப்பு (Rejection) என்றதே இங்கு இல்லை.சுவாசிக்கும் முறையிலும் இவை அபூர்வமானவை. செதில்கள் (Gills), நுரையீரல், மற்றும் தோல் வழி சுவாசம் என மூன்று விதமான சுவாச முறைகளை ஒரே உயிரினத்தில் காண முடிகிறது.மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரும்பாலும் தழும்புகளாக மாறும்.
ஆனால் ஆக்சோலோட்லுக்கு எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும், அந்த இடம் பழையபடி, எந்த அடையாளமும் இல்லாமல் முழுமையாகக் குணமாகிவிடும். இதனால்தான், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு மனிதர்களின் உடலில் தழும்புகள் இல்லாமல் காயங்கள் குணமடைய வழி கண்டறியும் ஆராய்ச்சிகளில், ஆக்சோலோட்ல் முக்கிய பங்கு வகித்து வருகிறது.அதனாலேயே,“ஆக்சோலோட்ல் – மருத்துவ அறிவியலின் உயிருடன் நடமாடும் அதிசயம்”என்று இதனை விஞ்ஞான உலகம் வியப்புடன் அழைக்கிறது.