தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அழைத்து ஆலோனை நடத்தியுள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கடந்த தேர்தல்களில் வாக்குகள் சிதறியதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை ஓரணியில் திரட்ட பாஜக மேலிடம் விரும்புவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் அமமுகவிற்கு இருக்கும் கணிசமான வாக்கு வங்கியை பயன்படுத்திக்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து, ஒரு வலுவான மெகா கூட்டணியை உருவாக்குவது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஒருவேளை அமமுக இந்த கூட்டணியில் இணைந்தால், அது திமுகவின் வெற்றி வாய்ப்புகளுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva