உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் வளாகத்தில், அனுமதியின்றி தொழுகை நடத்த முயன்ற காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அகமது ஷேக் (55) என்பவர் கோவிலுக்கு வந்துள்ளார்.
கோவில் வளாகத்திற்குள் சென்ற அகமது ஷேக், திடீரென அங்கு இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்த முயற்சி செய்துள்ளார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர், அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் சில கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அகமது ஷேக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கடந்த சில காலமாக மனநல பாதிப்பிற்காகக் காஷ்மீரில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த நிலையிலேயே அவர் அயோத்திக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், அவரிடம் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வழக்கமான தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்