ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் பறந்து வந்த புறா ஒன்று பிடிபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புறாவின் கால்களில் உலோகத்திலான வளையங்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, அதன் சிறகுகளில் விசித்திரமான முத்திரைகளும் காணப்படுகின்றன.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட இந்தப் புறா, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காகவோ அல்லது ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவோ அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தற்போது இந்தப் புறா பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன் உடலில் பொருத்தப்பட்டுள்ள வளையங்களில் ஏதேனும் ரகசியக் குறியீடுகள் அல்லது எண்கள் உள்ளனவா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற புறாக்கள் பிடிபடுவது இது முதல் முறையல்ல என்பதால், பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தப் புறாவின் பின்னணியில் உள்ள மர்மத்தைக் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.