தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இலவச லேப்டாப்களின் மேல் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கிய கையோடு சில மாணவர்கள் அந்தப் படங்களை தின்னர் கொண்டு அழித்துவிட்டு, தங்களுக்குப் பிடித்தவர்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், லேப்டாப்பில் உள்ள படங்களை நீக்கினால் ஓராண்டு வாரண்டி சலுகையைப் பெற முடியாது என்று எல்காட் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லேப்டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் சீரியல் எண் சரியாக இருந்தால் மட்டுமே பழுது ஏற்பட்டால் இலவசமாகச் சரிசெய்து தரப்படும் என்றும், இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் அரசு வழங்கும் உத்தரவாதத்தை மாணவர்கள் பெற முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள்தான் வாரண்டி குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால் உற்பத்தியாளர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வாரண்டி சிக்கல் இருப்பதால், மாணவர்கள் லேப்டாப்பில் உள்ள படங்களைச் சிதைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.