விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை… பிரம்மாண்டமாக நடந்த தேமுதிக மாநாடு… தேர்தலுக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!
SeithiSolai Tamil January 10, 2026 05:48 PM

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர்.

வரும் தேர்தலில் தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களை விளக்கும் வகையில் இந்த மாநாடு அமைந்தது. இதில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நதிகள் இணைப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கட்சியின் சார்பில் 10 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2026-இல் அமையவுள்ள ஆட்சி மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும், அனைத்துத் தரப்புப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியம் வழங்க வேண்டும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நதிகளை இணைப்பதுடன், நெல் மற்றும் கரும்பிற்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மகளிருக்கான உரிமைத் தொகை மற்றும் மாணவர்களுக்கான மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

மத மற்றும் சாதி ரீதியான வெறுப்புப் பேச்சுகளைத் தடுத்து சமூக அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானமும் இதில் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநாட்டின் மூலம் தேமுதிக தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.