கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திடீரென வந்த அவர், வரும் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கான நேர்காணலில் பங்கேற்க வந்ததாகவும் கூறி அதிர வைத்தார். இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அவரது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், “யாரைக் கேட்டு இங்கே வந்தாய்?” என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த தொண்டர்கள், அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாகப் பிடித்து வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கொண்டாடும் ஒருவர் அதிமுக அலுவலகத்திலேயே வெளியேற்றப்பட்ட இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.