கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் செவிலியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக நிரந்தர வேலை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடி வருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசு அந்த போராட்டங்களை ஒடுக்கி அவர்களை கைது செய்து வருகிறது. ‘எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பித்தான் திமுகவுக்கு வாக்களித்தோம்.. ஆனால் எங்கள் கோரிக்கைகளை ஏற்க முதல்வர் மறுக்கிறார்’ என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு படங்களுக்கும் தணிக்கை வாரியம் கொடுத்த சிக்கலை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் ‘வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்து மத்திய அரசு தணிக்கை துறையையும் தனது சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது.. அதற்கு கண்டனங்கள்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சீமான் ‘இந்த படத்திற்கு.. பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. பகுதி நேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை.. ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எல்லாம் கவனிக்காத முதல்வர் ஜனநாயகன் படத்திற்காக பதிவிடுகிறார்’ என பேசியிருக்கிறார்.