உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 64 பெண்கள் மீண்டும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், கர்ப்பம் தரித்த 90 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, 5 பெண்களின் இழப்பீடு கோரும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குளறுபடிகள் குறித்துப் பேசிய அலிகார் முதன்மை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் நீரஜ் தியாகி, கருத்தடைக்குப் பிறகும் கர்ப்பம் தரிக்க மிகச் சிறிய வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல் படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கர்ப்பம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு மாற்று மருத்துவ சிகிச்சை அல்லது மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரத் துறையின் இந்த மெத்தனப்போக்கை மறைக்க அதிகாரிகள் சமாதானம் கூறி வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.