மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் படகுத் துறையில் (Barrackpore Ferry Ghat) கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒரு நடுத்தர வயதுப் பெண் படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கங்கை நதியில் விழுந்தார்.
நதியின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் சுமார் மூன்று அடி ஆழத்திற்குத் தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கினார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த சிவில் வாலண்டியர் கோரக்ஷா தீட்சித் (Goraksha Dikshit) என்பவர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.
கையில் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு, சீறிப்பாயும் கங்கை நதியில் குதித்தார். தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைச் சாமர்த்தியமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார்.
இந்த த்ரில்லிங் மீட்பு நடவடிக்கைகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தனது உயிரைக் காப்பாற்றிய அந்த வீரருக்குக் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் அந்தப் பெண். கோரக்ஷா தீட்சித்தின் இந்தத் துணிச்சலான செயலை மேற்கு வங்க காவல்துறையும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.