தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக தரப்பில் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அதிமுகவின் பலமான கொங்கு மண்டலத் தொகுதிகளைத் தர வேண்டும் என்றும் கறாராகக் கேட்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, இப்போது மூன்று மடங்கு கூடுதல் இடங்களைக் கேட்பதுடன், ஆட்சியில் பங்காக அமைச்சரவையிலும் இடம் கேட்பது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறியைத் தீர்க்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அன்புமணி தலைமையிலான பாமக ஏற்கனவே இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பாஜகவின் இந்த அதிரடி டிமாண்டால் அதிமுக தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால் 2026 தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளதுடன், தொகுதிகளைப் பங்கிடுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மல்லுக்கட்டு நிலவி வருகிறது.