ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் ரெயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிக்கு உணவு விநியோகம் செய்ய ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவர் ரெயிலுக்குள் சென்றுள்ளார்.

அதே வேளையில், ரெயில் திடீரென புறப்படத் தொடங்கியுள்ளது.இதனால், அவசரமாக கீழே இறங்க முயன்ற அந்த ஊழியர் தடுமாறி நடைமேடையில் விழுந்தார். பலத்த காயம் ஏற்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக சில நொடிகளில் எழுந்து நடந்துசென்றார்.
இந்த பரபரப்பான காட்சியை மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.வீடியோவை பகிர்ந்த பயணி, “ரெயில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நின்று கிளம்பும் நிலையில், அந்த ஊழியர் விழுந்தார்; உயிரிழந்திருக்க கூடும்” என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.பலரும், “ரெயில்கள் பெரும்பாலும் தாமதமாக வந்தாலும், நிலையங்களில் நிற்கும் நேரம் மிகக் குறைவு. இப்படிப்பட்ட சூழலில் டெலிவரி ஊழியர்களை உயிரை பணயம் வைத்து வேலை செய்ய வைக்கலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பயணிகள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்தபடி உணவை எதிர்பார்க்காமல், பெட்டியின் வாசலுக்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் ஜன்னல் வழியே உணவு வழங்க இயலாததால், ரெயில் குறுகிய நேரம் மட்டுமே நின்றால் இத்தகைய விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில், சம்பந்தப்பட்ட ஊழியர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வு, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு, ரெயில்வே நடைமுறைகள் மற்றும் பயணிகளின் பொறுப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.