நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் நிலவும் சிக்கல் காரணமாக அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று (ஜன.11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தணிக்கை வாரியத்தின் மூலம் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை முடக்குகிறது; இதன் பின்னணியில் பாஜக உள்ளது,” என்று தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதால் அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே திட்டமிட்டு இத்தகைய தடைகள் ஏற்படுத்தப்படுவதாகச் சாடிய அவர், படைப்பு சுதந்திரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, தனி நீதிபதி வழங்கிய தணிக்கைச் சான்றிதழ் உத்தரவிற்குச் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.