தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை திடீரென சென்னை புறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ராமதாஸின் சமீபத்திய கருத்துகள் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. இணைந்துள்ளதாகத் தகவல் பரவி வந்தது. ஆனால், இதனை மறுக்கும் விதமாகப் பேசிய டாக்டர் ராமதாஸ், “அந்தக் கூட்டணி சட்டரீதியாகச் செல்லாது; என்னுடன் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்” என அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், “பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது; தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது” என அவர் சூசகமாகக் கூறியது, தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் மூலமாகப் பா.ம.க-வுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பா.ம.க எங்குச் செல்லும் என்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், தைலாபுரத்திலிருந்து இன்று மாலை 4.30 மணி அளவில் டாக்டர் ராமதாஸ் சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நாளை (திங்கட்கிழமை) காலை தனது இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தைலாபுரத்திலோ அல்லது சென்னையிலோ வெளியிடப்படலாம் என பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.