பராசக்தியையே தடை பண்ணல.. ஜனநாயகன் ஏன்?!.. குஷ்பு பேட்டி!..
WEBDUNIA TAMIL January 12, 2026 03:48 AM


ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் அப்படம் சென்சாரில் சிக்கியதால் அந்த தேதியில் வெளியாகவில்லை. சென்சார் அதிகாரிகள் கூறிய மாற்றங்களை செய்த பின்னரும் சான்றிதழ் கொடுக்காமல் மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டும் என சென்சார் போர்டு சொன்னதால் அதிர்ச்சியடைந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

முதலில் அவருக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் சென்சார் சார்பில் மேல்முறையீட்டுக்கு சென்றபோது அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. அதனால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த அந்த நீதிபதி வழக்கை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். எனவே ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டால் அதன்பின்னர் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இந்நிலையில் பாஜக நிர்வாகியான நடிகை குஷ்புவிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் போனது எனக்கு வருத்தம்தான். நானும், என் மகளும் கூட விஜயின் ரசிகைகள்தான். ஆனால் இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மத்திய அரசு தடை செய்ய வேண்டுமெனில் ரெட் ஜெயண்ட் வெளியிடும் படத்தைதான் அவர்கள் தடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் பராசக்தி படத்தைதான் அவர்கள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. சென்சார் போர்டு விதிமுறைகளின் படி சான்றிதழ் கிடைத்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்க வேண்டும்.. ஆனால், தயாரிப்பாளர்கள் இதை பின்பற்றுவதில்லை. எனவே இது முழுக்க முழுக்க தயாரிப்பாளரின் தவறு. திமுக அரசு வேண்டுமென்றே மக்களை திசை திருப்புகிறது என்று பேசியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.