ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் உள்ள ஆனந்த்புரியில், ஒரு சிறிய ஜீப்பில் இத்தனை பேரா என்று வாயடைத்துப் போகும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 16 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட அந்த ஜீப்பில், சுமார் 60 பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். ஜீப்பின் மேற்கூரை, முன் பகுதி (பானட்), மற்றும் பின்னால் இருந்த கூடுதல் டயர் (ஸ்டெப்னி) என எங்கு பார்த்தாலும் மக்கள் தொங்கிக் கொண்டு சென்ற காட்சி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. இந்தப் பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வேறு வழியின்றித் தங்கள் உயிரைப் பணையம் வைத்து இப்படிப் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பகுதிக்குத் தனிப் படையை அனுப்பினர். அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களை வழிமறித்து அபராதம் விதித்ததோடு, கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். சாலை விதிகளை மீறுவது ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புறங்களில் நிலவும் போக்குவரத்துப் பற்றாக்குறையே இதுபோன்ற விபரீதப் பயணங்களுக்கு முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.